மீண்டும் சந்திப்போம் . . .

டிசம்பர் மாத விடுமுறை என்றவுடன், என்னை கேட்காமலே என்னை விட்டுவிட்டு மனம் மட்டும் ஊரை நோக்கி பயணப்பட்டுவிட்டது. மனம் முழுவதும் கிராமத்தின் வாசம். எனக்குத்தான் அதிர்ஷ்டம் இல்லை. அடுத்த மூன்று நாட்கள் இங்குதான் தங்க வேண்டும். இருந்தாலும், மனதளவில் கிராம வாழ்கைதான் (சரி... சரி... ஆறு மாசம் கழிச்சு சொந்த ஊர் திரும்புற ஒரு கிராமத்து பையனுக்கு இருக்க வேண்டிய ஃபீலிங்ஸ்தான். மேல சொல்லு). இங்கு என்னதான் கோட்-சூட் போட்ட இளைஞனாக வலம் வந்தாலும், கிராமத்தில் கோவணம் கட்டிய உழவனாக மாறுவதில் எனக்கிருக்கும் ஆனந்தம் இன்னும் குறையவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும் (நிறுத்து... நிறுத்து... ஓவர் பில்டப்பு ஒடம்புக்கு ஒத்துக்காது பாத்துப் பேசு ராசா).

சரி விஷயத்துக்கு வருவோம், என்னால சேரன் ரேஞ்சுக்கு "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே” - ன்னு பாட்டெல்லாம் எழுத முடியாது, இருந்தாலும் எங்க கிராமத்த பத்தி கொஞ்ச – நஞ்சம் தெரிஞ்சத சொல்லலாமேன்னுதான் இந்தப் பதிவு (ஐயோ கொல்றானே..... அப்புடி அந்த கிராமத்துல என்னதான் இருக்கு சொல்லித் தொலையேன்). கோவப்படாதீங்க, இதோ எங்கள் கிராமத்தின் டாப்-10 விஷயங்கள்:
  • நாட்டு நடப்பு என்ற பெயரில் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டின் புருஷன் பொஞ்சாதி சண்டையில் துவங்கி சர்வதேச கோப்பன்ஹேகன் மீட் வரை எல்லாமும் தெரிந்தார்போல் எப்போதும் பிதற்றுகின்ற ஊர் பெருசுகள் அமரும் அரச மரத்தடி சிமென்ட் மேடை.

  •  அதிகாலைப் பொழுதில் (காலை மூன்று முதல் ஐந்து மணி வரை) கிராம வாசிகளின் சுறுசுறுப்பான முனுமுனுப்புகள், கரவைப் பசுக்களின் கால் நடை சப்தம், கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கோழிகளின் கூக்குரல், அதிகாலையிலேயே இறையைத் தேடி பயணம் கொள்ளும் ஆடுகளின் குலம்படிச் சப்தம், இடையிடையே நடராஜர்பத்து படிக்கொண்டு சங்கம் ஊதும் ஏதோ ஒரு கிராம வாசி, இவையாவும் நம் உறக்கத்தை விரட்டும் அலாரமாக அமையும் என்பதில் வியப்பொன்றுமில்லை

  • உறங்கும் கண்களை கசக்கிக் கொண்டே வெளியே வந்தால் (நாம எழுந்திருப்பது ஐந்து மணிக்கு மேலதாங்க) வீடுகள் தோறும் மாக்கோலம் பூசணிப் பூ அலங்காரம் என்று தினம் தினம் மார்கழியைக் கொண்டாடும் எங்கள் ஊர் தெருவீதிகள் நம்மை உற்சாகமாய் வரவேற்கும்.

  • காலையோ மாலையோ 3 மணி என்றவுடன் தன் வேலைகளைத் துவங்கிவிட்டு 8 மணி ஆகும் வரை ஓயாமல் உழைக்கின்ற 'டீக்கடை பாய்' (இது ஆங்கிலத்தில் சொல்லும் 'Tea Boy’ இல்லீங்க, மதிப்பு மிகுதியால் வயதில் மூத்த ஒரு முஸ்லிம் சகோதரரை அழைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை).

  • அவருடன் சேர்ந்து ஒய்வே இல்லாமல் உழைத்து உழைத்து எல்லோரையும் தாங்கித் தாங்கி வழவழப்பாகிப்போன 'டீக்கடை பெஞ்சுகள்' (தமிழகத்தின் அரசியல், சமூகம், மற்றும் பொருளாதார வரலாற்றில் டீக்கடை பெஞ்சுகளுக்கு ஒரு தனி இடம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது).

  • காலையில் எழுந்ததில் துவங்கி இரவு தூங்கும் வரை கூடவே சுற்றித் திரியும் பத்து பதினஞ்சு பாசக்காரப் புள்ளைங்க (அதாங்க ஃபிரண்ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்).

  • வேப்பங்குச்சி, வேலங்குச்சி, நாயுருவினு நிண்டுகிட்டே போகும் பல்தூரிகைப் பட்டியல்.

  • நிலத்திலும் நீரிலும் வாழும் ஒரே ஜீவன் தவளை என்பதை பொய்யாக்கும் விதமாக பல மணி நேரம் நீளும் கிணற்றுக் குளியல் (ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நீளும் இந்தக் குளியல் நண்பர்களுடனான ஒரு கூட்டுக் குளியலும் கூட).

  • காலை Tiffin, மத்தியம் Lunch Box Food, இரவு Dinner என்ற அளவுச் சாப்பாட்டையெல்லாம் ஓரங்கட்டி மூனு வேலையும் தலைவாழையிலையில் (சில சமயம் கூழோ கஞ்சோ கூட கிடைக்கலாம், ஆனால் மூச்சுத் திணறத் திணற) ஃபுல் மீல்ஸ்.

  • கணிணிகள் இல்லை, புகையைக் கக்கும் கார்கள் இல்லை, நொடிகளைத் துரத்தும் கவலையுமில்லை ("நாமே ராஜா நாமே மந்திரி" என்ற வாழ்கை).

இத்தனை சிறப்புக்கும் உரிய எங்க ஊரு ஒரு சின்ன கிராமந்தாங்க, ஏறக்குறைய 300-400 குடும்பங்கள் இருக்கும்-னு நெனைக்கிறேன். ஆனாலும் எங்க ஊர் எனக்கு ரொம்ப பிடிக்கும். (ஒரு குக்கிராமத்துல இருந்து வந்துட்டு என்னமா பில்டப் குடுக்கறான் பாரு..... டேய் போதும்டா) என்ன பன்றது,

சொர்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?

இதுக்கு மேலயும் எங்க ஊர பத்தி ஸ்டாராங்கா பில்டப் குடுக்க விரும்பல.குடுக்கவும் முடியாது, குடுத்தா தாங்காது. Basically எங்க ஊரோட base மட்டம் கொஞ்சம் weak. Escape.....

மீண்டும் சந்திப்போம் ஜனவரி 2010ல்.

கடைசியா ஒன்னே ஒன்னு.....


(என்னட 30 – 45 நாளுக்கு முன்னாடியே சொல்ற?) புரியலையா.......... நாங்கல்லாம் ரொம்பவும் Advanced.

3 Comments:

sathishsangkavi.blogspot.com said...

//சொர்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?//

எந்த மாசும் படாமல் கிடைக்கும் காற்று, நீர்......
பசு மாட்டின் சத்தம்.......
விடியற்காலை கோழி கூவும் சத்தம்....
இன்னும்.....................

உங்க டாப் டென் படித்ததும் எங்க கிராமத்திற்கு
போன உணர்வு...........

ராமலக்ஷ்மி said...

உங்க கிராமத்தை சுற்றிக் காண்பித்திருப்பதற்கு நன்றி:)! சரிங்க, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)! விடுப்பு அருமையாக அமையவும் வாழ்த்துக்கள்!

துளசி said...

//Sangkavi said...

உங்க டாப் டென் படித்ததும் எங்க கிராமத்திற்கு போன உணர்வு...........//

//ராமலக்ஷ்மி said...

உங்க கிராமத்தை சுற்றிக் காண்பித்திருப்பதற்கு நன்றி:)! சரிங்க, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)! விடுப்பு அருமையாக அமையவும் வாழ்த்துக்கள்!//

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சங்கவி மற்றும் ராமலக்ஷ்மி. காலம் தாழ்த்திய என்னுடைய மறுஉரைக்கு வருந்துகிறேன்.