மதம் வன்முறையா? வாழ்கைமுறையா?

1 Comments
முன்குறிப்பு: உண்மையில் இந்த இடுகை 07 July 2010 ல் அகம்பாவன் என்ற எனது மற்றொரு வலைதளத்தில் எழுதப்பட்டதாகும். இங்கே இதை ஒரு மீள் பதிவாக சேர்த்திருக்கிறேன்.

மதக்கலவரங்களும், மதப்பற்று என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களும் மனித குலத்தின் சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் கையை இழந்த கேரளாவின் ஜோசப்பும், 2008ல் ஐதராபாத்தில் உயிருடன் கொளுத்தப்பட்ட மூன்று சின்னஞ்சிறு முஸ்லீம் குழந்தைகளும் மதவாத குரூரத்தின் ஒரு சில உதாரணங்கள்தான். குஜராத் கலவரத்தில் கும்பல் கும்பலாய் கொளுத்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான அப்பாவி மனிதர்கள், பம்பாய் கலவரத்தில் பலியானவர்கள், ஒரிசாவின் கந்தமாலில் நடந்த கொடூர தாக்குதல்கள்... சொல்லிக்கொன்டே போகலாம். காரணம் என்ன? மதம் மதம் மதம். மதமென்ன நம் பிறவிக்குனமா மதியிழந்து நடப்பதற்கு. அது மனிதனின் வளர்சிக்கேற்ப மாறுபடும் ஒரு சாதாரன பழக்க வழக்க வாழ்கைமுறைதானே. இதற்க்காகவா இத்தனை வன்முறை? அடிப்படைவாதிகளையும் மதவாதிகளையும் பார்த்துக் கேட்கிறேன்:

கிறித்தவத்தின் இயேசுவும், இஸ்லாத்தின் முகம்மதுவும், பௌத்தத்தின் புத்தனும் எந்த மதத்தில் பிறந்தார்கள்? எந்த மதத்தை தழுவி நின்றார்கள்? எந்த மதத்தின் கொள்கைக்காக இரத்த வெறிபிடித்து அலைந்து திரிந்தார்கள்? அவர்கள் பிற்பபதற்க்கு முன் உலகம் என்ற ஒன்று இருக்கவில்லையா? அந்த உலகத்தின் மக்கள் எந்த மதமும் விதிமுறைகளும் இல்லாமல்தான் வாழ்ந்துகொன்டிருந்தார்களா? மனிதன் மனிதானாக வாழத்துவங்கிய நாள் முதல் மதங்களும் வாழ்ந்துகொன்டுதானிருக்கின்றன. ஆனால், 'மதம்' செய்த மனிதர்களோ தாம் பிறந்த மதங்களைத் துறந்து, சுயமாய் சிந்தித்து தனக்கென ஒரு பாதையை வகுத்து வாழ்ந்திருக்கிறார்கள். சுயமாய் சிந்திக்க இயலாத நாம்தான் அவர்கள் சிந்தித்தவற்றை கண்மூடித்தனமாய் பின்பற்றி, அது என் மதம், அவன் அந்த மதம், இவன் இந்து மதம் என்று மார்தட்டிக்கொண்டு மானங்கெட்டுத்திரிகிறோம்.

 • யூதனாய் பிறந்த இயேசு கிறிஸ்த்து, இன்றைய மேலைநாட்டு கிறித்தவர்களைப்போல், தான் பிறந்த மதமொன்றே தலைசிறந்த மதமென்று நினைக்கும் தலைகனம் கொன்ட முட்டாளாய் இருந்திருந்தால் 'கிறித்தவம்' என்ற ஒன்றை நாம் கேள்விப்பட்டிருப்போமா?
 • ஏதோ ஒரு மதத்தில் பிறந்த முகம்மது நபிகள், இன்றைய இஸ்லாத்தின் அடிப்படைவாதிகளைப்போல், மாற்றுக் கருத்து மனதிலுதிக்கவும் மறுக்கின்ற மூடனாய் இருந்திருந்தால் 'இஸ்லாம்' என்றொரு இனிய மதம் உதித்திருக்குமா?
 • இல்லறம் வெறுத்துவிட்ட புத்தன், பாரதத்தின் சந்நியாசிகள் பலரைப்போல், இந்து மதம் இனியதென்று மதிகெட்டுத் திரிந்திருந்தால் 'பௌத்தம்' புதைந்திருக்கும் புத்தனின் கலலறையில்...

  மதம் செய்த ஒவ்வொருவரின் வாழ்கையையும் உற்று நோக்கினால் எல்லோருக்கும் பொதுவான ஒரு உண்மை இதுதான்: தனியொரு மனிதன் நினைத்தான் சரியெனப்பட்டதை போதித்தான். சரியாகப் புரியாதா நாம்தான் கூட்டம் கூட்டமாய்ச் சாகிறோம். நம்மைப் போன்ற யாரோ ஒருவன் பலநூரு வருடங்களுக்கு முன்னால் எதையெதையோ சொல்லிச் சென்றானாம். அவர்களை மகான்கள் என்றும் அவர்கள் சொன்னவையெல்லாமே முடிவான உண்மையென்றும் (Ultimate Truth?) நம்பி வாக்குவாதம் செய்து வெட்டிச் சாகிறோம்.

  மனிதர்களை மகான்களாகப் பார்ப்பதினால்தான் நாம் 'தான்' மனிதனென்பதையும் உணராத மரக்கட்டைகளாகிவிட்டோம். அவர்கள் சிந்தித்த வழியில் எப்படி செயல்பட வேண்டும் என்று சிந்திப்பதிலேயே நம்முடைய இயல்புச் சிந்தனையை இழந்து மடையர்களாகிவிட்டோம். இருக்கும் சிந்ததைகள் எல்லாமே இறுதியான உண்மையென்று நம்புவதற்கு மனிதனென்ன கலியுகத்தின் கம்ப்யூட்டர் மெஷின்களா? முடிவான உண்மையென்று உலகில் எதுவும் இல்லை. இருக்கும் மதங்களும் அதன் உண்மைகளும் ஒருநாள் அழியலாம், புதுப்புது மதங்கள் தோன்றலாம். இதுதானே இயற்கையின் நியதி. அர்த்தமற்ற அடிப்படைவாதத்தால் அடையப்போவதுதான் என்ன?

  இயேசுவைச் சிலுவையில் அறைந்தவர்களுக்கும், நபிகள் நாயகத்தை மெக்காவை விட்டு துரத்தியவர்களுக்கும், மதம் மதம் என்று மதம்பிடித்து அலைகின்ற இன்றைய மதவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிட முடியும்?
  மதமென்ற பெயரில்
  மனிதரைக் கொல்லும்
  நரகபலிக் கூட்டம்
  திரிகின்ற உலகம்...

  மதம்செய்த மனிதர்
  மீண்டுமிங்கு வந்தால்
  மாண்டும் போகலாம்
  கலவரங்களிள் சிக்கி!

  பின்குறிப்பு: நானும் பிறப்பால் ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவனாக இருக்கலாம், ஆனால் என் கருத்துக்கள் எந்த மதத்தையும் (நாத்திகம் உட்பட) சார்ந்தவை அல்ல. நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, உங்கள் கருத்தை நீங்கள் தராளமாக தெரிவிக்கலாம்.